போராடி வென்ற நியுசிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் எட்டாவது மோதலாக நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இப்போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகியது.


போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்காக வழங்கினார்.
முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்த போதிலும் அதனை பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கார் ஆகியோர் சரியான முறையில் கொண்டு செல்ல தவறினர்.

பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக செளம்யா சர்க்கார் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த விக்கெட்டாக தமிம் இக்பால் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்
தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது அரைசதத்துடன் வலுச்சேர்த்தார்.  எனினும், சகீப் அல் ஹஸனின் விக்கெட் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கொலின் டி கிரான்ஹோமேவின் வேகத்திற்கு இரையானது. மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்ட சகீப் அல் ஹஸன் ஆட்டமிழக்கும் போது 7 பெளண்டரிகள் அடங்கலாக ஒருநாள் போட்டிகளில் தனது 44ஆவது அரைச்சதத்தை பதிவு செய்து 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

சகீப் அல் ஹஸனின் விக்கெட்டினை அடுத்து பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இதேநேரம், பங்களாதேஷ் அணியின்  மத்திய வரிசை வீரர்களில் மொஹமட் சயீபுத்தின் (29) மற்றும் மொஹமட் மிதுன் (26) ஆகியோர் மாத்திரமே இருபது ஓட்டங்களை கடந்திருந்தனர்.

தொடர்ந்து 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி, 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.


நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக மேட் ஹென்ரி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். அதோடு, ட்ரென்ட் போல்ட் இப்போட்டி மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தான் கைப்பற்றிய 150ஆவது விக்கெட்டினையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் 245 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய நியூசிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோர் எதிர்பார்த்த அளவு ஜொலிக்க தவறி ஆட்டமிழந்தனர். கப்டில் அதிரடியான ஆட்டத்தை காண்பித்து வெறும் 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெற்றதோடு, மன்ரோ 24 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

எனினும், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் மூன்றாம் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டம் (105) ஒன்றை உருவாக்கினர். இந்த இணைப்பாட்டத்தினால் நியூசிலாந்து அணி போட்டியில் வெற்றியினை நோக்கி இலகுவாக நகர்ந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டாக அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களோடு மெஹிதி ஹஸனின் சுழலில் வீழ்ந்தார்.

தொடர்ந்து புதிய வீரராக வந்த டொம் லேதமும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கேன் வில்லியம்சனுடன் முன்னதாக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிய ரொஸ் டெய்லரின் விக்கெட்டும் அவர் அரைச்சதம் பெற்ற நிலையில் பறிபோனது. ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 48ஆவது அரைச்சதத்தை பதிவு செய்த ரொஸ் டெய்லர், 91 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றிருந்ததார்.

டெய்லரின் விக்கெட்டின் பின்னர் நியூசிலாந்து அணியினர் சிறிது தடுமாற்றத்தை காட்டிய போதிலும் போட்டியில் தோல்வியுறும் நிலைக்கு சென்றிருக்கவில்லை.

அதன்படி, 47.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து அணி 248 ஓட்டங்களை பெற்று போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தனது துடுப்பாட்டம் மூலம் சிறிய பங்களிப்பினை வழங்கிய ஜேம்ஸ் நீஷம் 25 ஓட்டங்களை பெற்றுத்தந்ததோடு, மிச்செல் சேன்ட்னர்  17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.


பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக மெஹிதி ஹஸன், சகீப் அல் ஹஸன், மொசாதிக் ஹொசைன் மற்றும் மொஹமட் சயீபுத்தின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றிக்காக முயற்சி செய்திருந்த போதிலும் அது பலன் தரவில்லை.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான ரொஸ் டெய்லர் தெரிவாகியிருந்தார்.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்திருக்கும் நியூசிலாந்து அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (08) டோன்டவுன் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி: தொடரை வென்றது பாக். இளையோர்

இதேநேரம் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் தோல்வியினை சந்தித்துள்ள பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணி விளையாடும் அதேநாளில் தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியை கார்டிப் நகர மைதானத்தில் வைத்து சந்திக்கின்றது.

No comments

Powered by Blogger.