மேற்கிந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்தில் துவங்கி உள்ள 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக அந்த அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒருநாள் போட்டி தொடரில் 4-0 என்று படுதோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து மண்ணில் அந்த அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருப்பது அதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
ஒருநாள் போட்டிகளுக்கான பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிஸ் கெயில், அண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ஷய் ஹோப் ((Shai Hope)) என அதிரடி பேட்ஸ்களின் பலத்தோடு களமிறங்குகிறது. உலகக்கோப்பை பயிற்சி போட்டியிலும் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை 10 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 முறை வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.