 |
Yarlsports.com |
கெப்டன் சோமசுந்தரம் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியது திருநெல்வேலி அணி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஐக்கிய இராச்சிய கிளையின் அனுசரணையில் ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கெப்டன் சோமசுந்தரம் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் எக்கிரஸிவ் போய்ஸ் விளையாட்டுக் கழக (ஏபி) அணியினை சுரேந்திரனின் அதிரடியின் துணையுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியினர் சம்பியன் கிண்ணத்தினை தமதாக்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற திருநெல்வேலி அணியின் தலைவர் பிரபவன் முதலில் ஏபி அணியினை துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்தார். ஏபி அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் 21 ஓட்டங்களிற்கு ஆட்டமிழக்க, தொடர்ந்தும் களத்திலிருந்த விஷ்ணு 22 ஓட்டங்களுடனும், உத்தமகுமரன் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய ஆதித்தன் 31 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் சிலோஜனின் 23 ஓட்டங்கள் மற்றும் டிலுஜனின் 14 ஓட்டங்களுடன் ஏபி அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அறிமுக தொடரில் ஆடிவரும் தீபநாதன் 3 விக்கெட்டுகளையும், சிவராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். திருநெல்வேலி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட இணை வெறுமனே 14 ஓட்டங்களோடு அரங்கு திரும்பியது. நான்காவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த சிவராஜ், லவகாந் இணை 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். லவகாந் 35 ஓட்டங்களையும், சிவராஜ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். அனுரதனும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 16 ஓவர்களில் 120 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்தது திருநெல்வேலி அணி. “நன்கு ஓவர்களுக்கு 41 ஓட்டங்கள்– 4 விக்கெட்டுகள்” என்ற நிலையில் போட்டி விறுவிறுப்படைந்தது. மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டபோதும் சுரேந்திரன் அதிரடியாக 13 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 9 பந்துகள் மீதமாகவிருக்கையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியினை தமதாக்கியது திருநெல்வேலி கிரிக்கெட் கழகம். ஏபி அணியின் சார்பில் சஜீபராஜ் மற்றும் சிலோஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். போட்டியின் சுருக்கம் ஏபி 160/10 (20) – ஆதித்தன் 42, சிலோஜன் 23,விஷ்ணு 22, தீபநாதன் 3/43, சிவராஜ் 2/22 திருநெல்வேலி 162/7 (18.3) சுரேந்திரன் 42*, சிவராஜ் 38, லவகாந் 35, லிங்கநாதன் 2/17, சஜீபராஜ் 2/41 போட்டி முடிவு – 3 விக்கெட்டுகளால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் வெற்றி போட்டி ஏற்பாட்டாளர்கள் மாகாணத்தின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களான செல்வராசா மதுசன், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் அலன்றோஸ் காலேப் ஆகியோரது திறமை பாராட்டி கௌரவிப்பினையும் வழங்கியிருந்தனர். விருதுகள் *)ஆட்டநாயகன் – சுரேந்திரன் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்) *)பெறுமதிமிக்க வீரர் – சிவராஜ் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்) *)Super Striker – சுரேந்திரன் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்) *)Stylish Player – ஆதித்தன் (ஏபி விளையாட்டுக் கழகம்) *)தொடர் நாயகன் – பிரசன்னா (ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்) *)அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் – தீபநாதன் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்) *)அதிக ஓட்டங்கள் பெற்றவர் – அருண்குமார் (ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்) *)நன்னடத்தை அணி – கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம்
Post a Comment