வாங்கோவன் பிக் மட்ச் பார்க்க
இரண்டு பாடசாலைகளின் ரசிகர்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், ஏன் புலம்பெயர்ந்து வாழுபவர்களை ஒரு முறை ரிக்கெட் போட்டு, யாழ்ப்பாணத்துக்கு வந்து போகச் செய்யும் வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்.
புனித பரியோவன் கல்லூரி என அழைக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் கிரிக்கெட் சமரே வடக்கின் மாபெரும் போர் என அழைக்கப்படுகின்றது.
நூற்றாண்டுகள் கடந்த 113 ஆவது போட்டியானது எதிர்வரும் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் தெற்கில் நடைபெறும் நீலங்களின் போரை அடுத்து, மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டமைந்ததாக வடக்கின் மாபெரும் போர் உள்ளது.
வடக்கின் மாபெரும் போர் 1901 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 112 போட்டிகளைக் கடந்து வந்துள்ளது.
இதுவரையில் நடைபெற்ற 112 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 28 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
40 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் இருக்கின்றன.
இறுதி இரண்டு வருடங்களில் 2017 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸ் வெற்றியொன்றைப் பதிவு செய்ததுடன், 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 1 விக்கெட்டால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வரலாற்றுச் சாதனைகள்
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1993 ஆம் ஆண்டு 9 விக்கெட் இழப்பிற்கு 1993 ஓட்டங்களை எடுத்தமை அதிகூடிய ஓர் இனிங்ஸிற்கான ஓட்டமாகவுள்ளது. சென்.ஜோன்ஸ் அணி, 1999 ஆம் ஆண்டு 6 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்களை எடுத்தமை அந்த அணியின் அதிகூடிய ஓட்டமாகவுள்ளது.
- 112 கால வரலாற்றில் இதுவரையில் 20 சதங்கள் மொத்தமாக அடிக்கப்பட்டுள்ளன. சதங்களில் சென்.ஜோன்ஸ் வீரன், சுரேஸ்குமார் 1990 ஆம் ஆண்டு பெற்ற 145 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டமாகவுள்ளது.
- யாழ்ப்பாணம் மத்தியின் பந்துவீச்சாளர் வி.சண்முகம் 1951 ஆம் ஆண்டு 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்தியமை, வடக்கின் மாபெரும் போரின் சிறந்த பந்துவீச்சாக இன்றுவரையில் உள்ளது. சென்.ஜோன்ஸ் அணியின் ஈ.ஜி.தேவநாயகம் 1950 ஆம் ஆண்டு 33 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்தியமை, அடுத்த சிறந்த பந்துவீச்சு பெறுபேறாகவுள்ளது.
- இணைப்பாட்டம் என்று பார்க்கையில், 1999 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஏ.ரி.கௌரிபாகன் - கே.பிரகாஸ் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 200 ஓட்டங்களை கடந்தமை உள்ளது.
சென்.ஜோன்ஸ்
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இம்முறை பி.லவேந்திராவின் இளமையும், வீரர்களை அவர்களின் போக்கில் விட்டு, அதன் பின்னர் கட்டுப்படுத்தி அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வளர்க்கும் தன்மை கொண்ட ஒரு இளம் பயிற்றுநரின் கைகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக முர்பின் அபினாஸ் உள்ளார். தொடர்ந்து அணியில், நாகேந்திரராஜா சௌமியன், தெய்வேந்திரன் டினோசன், பரராஜசிங்கம் எல்சான் டேனுசன், நாகேஸ்வரன் றதுசன், மகேந்திரன் ஹேமதுசாந், கிறிஸ்ரி பிரசன்னா தனுஜன், அன்ரன் செல்வதாஸ் சரண், அன்ரன் அபிசேக், கமலபாலன் சபேசன், சிவராஜா பிரணவன், யோகதாஸ் விதுசன். கனகரத்தினம் திஸான், குகனேஸ்வரன் கரீசன், சிறிதரன் சஜித், தியாகராஜா வினோதன், சுதாகரன் சஞ்சித், அந்தோனிப்பிள்ளை சுகீதன், கஜேந்திரன் தமிழ்கதிரபிரஞ்சன், ஜெயமிரகன் மரிய திலக்ஸன் ஆகியோர் உள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 15 வருட கால அனுபவம் மற்றும் அமைதியாக கர்ச்சிக்கும் சுரேஸ்மோகனின் பயிற்றுவிப்பில் உருவாகியுள்ளது. அணியின் தலைவராக, இலங்கை 19 வயதுப்பிரிவு தேசிய அணியின் இடம்பிடித்த வீரன் செல்வராசா மதுசன் உள்ளார். இவருடன், 19 வயதுப்பிரிவு தேசிய அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் கலக்கும் விஜஸ்காந்தும் அணியில் உள்ளார்.
மேலும் அணியில், அணியில், ஏ.ஜெயதர்சன், கே.இயலரசன், ஆர்.ராஜ்கிளிண்டன், எஸ்.நிதர்சன், ரி.விதுசன், எஸ்.சாரங்கன், ரி.கௌதம், என்.திவாகரன், ஏ.நிதுசன், கே.பிரவீன்ராஜ், பி.இந்துஜன், ரி.லுபியன், எஸ்.இளங்கீதன், எஸ்.பிரசாத், பி.குகசதூஸ், பி.ஏ.கஜன் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு வெற்றியை தொடர்ந்து பெற்று, வெற்றி எண்ணிக்கையில் தங்களை அதிகப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் யாழ்ப்பாணம் மத்தியும், தங்களுடைய வெற்றிப் பயணத்தை மீண்டும் ஆரம்பித்து, தங்களின் உறுதியான நிலையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடன் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் களமிறங்கவுள்ளது.
7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரையும் வடக்கின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள், புலம்பெயர்ந்துள்ளவர்கள் அனைவரது கண்களும் ஏதொரு வழி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தையே பார்த்துக்கொண்டிருக்கும்.
Post a Comment