ஸ்கந்தா - மகாஜனா வீரர்களின் போர் சமநிலையில் முடிவு

வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிக்கும் இடையிலான 19 ஆவது பெருந்துடுப்பாட்ட போட்டி 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக வீரர்களின் போர் நடைபெறுகின்றது. இரு அணிகளுக்குமிடையில் இதுவரையில் நடைபெற்ற 18 போட்டிகளில் மகாஜனாக் கல்லூரி அணி 5 போட்டிகளிலும், ஸ்கந்தாவரோதயக் கல்லூரி அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 9 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மகாஜனா அணி 5 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகள் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்கந்தா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதற்கிணங்க களமிறங்கிய மகாஜனாக் கல்லூரி அணி, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 144 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் கே.கிருசன் 31, எஸ்.வரலக்ஸன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பாக, எஸ்.டான்ஸன் 10 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், எஸ்.டிலக்ஸன், எஸ்.அமிர்தசரதன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய எஸ்.டிலுக்ஸனின் அரைச்சதம் மற்றும் பொறுப்பான துடுப்பாட்ட வீரர்களின் துணைகொண்டு, 60 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை எடுத்தது. டிலுக்ஸன் 51, எஸ்.டான்சன் 29, ஜே.கலிஸ்ரன் 28, எஸ்.பிரசான் 25, எஸ்.சோபிதன் 20 ஓட்டங்களையும், டக்ஸன் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மகாஜனாக் கல்லூரி அணி சார்பாக, ஆர்.சுஜன் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், சதுர்ஜன் 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். 104 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிங்கிய மகாஜனாக் கல்லூரி அணி, இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க மிகவும் பொறுமையாக ஆடியது. ஸ்கந்தா அணியின் பந்துவீச்சாளர்களின் ஆக்கிரோசமான பந்துவீச்சின் முன்னால், இரண்டாம் நாள் முடிவு வரையிலும் மகாஜனாக துடுப்பாட்ட வீரர்கள் நின்று நிதானித்து, போட்டியை சமநிலைப்படுத்தினர். இரண்டாவதும், இறுதியுமான நாள் முடிவில் மகாஜனாக் கல்லூரி அணி, 78 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் கே.கிருசன், எஸ்.சிலக்சன் தலா 24 ஓட்டங்களையும், யு.மதீசன் 21 ஓட்டங்களையும், ஆர்.சுஜன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பாக, ஏ.தனுஸன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், எஸ்.டான்ஸன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வீரர்களின் போரின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தா அணியின் டான்சனும், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த சகல துறை வீரராக அதே அணியின் சிலக்சனும், சிறந்த களத்தடுப்பாளராக மகாஜனா அணியின் கிருசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.