சமநிலையில் முடிவடைந்த 19வது வீரர்களின் போர்.
19 ஆவது வீரர்களின் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. ஆட்டம் ஆரம்பமாகையில் மாகாஜன கல்லூரியினை விட ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் 3 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கையில், 36 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தனர். தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் 248 ஓட்டங்களை தமது முதலாவது இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டனர். முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மகாஜன கல்லூரி ஓட்டங்கள் ஏதுமின்றி முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தனர். அடுத்த விக்கெட்டிற்காக அணித்தலைவர் பகீரதனுடன் இணைந்த மதீசன் 14 ஓவர்கள் நிதானமாக துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களை சேகரித்தார். அடுத்த விக்கெட் விரைவாக வீழ்த்தப்பட்ட போதும், கிருசன், வரலக்சன், சுலக்சன், சுஜன் என தொடர்ந்துவந்த வீரர்களும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடி ஸ்கந்தவரோதயா கல்லூரியினது வெற்றிவாய்ப்பை பறித்தெடுத்துக்கொண்டனர். ஒரே முனையில் சீரான இடைவெளியில் தனுசனிற்கு விக்கெட்டுக்கள் கிடைத்த போதும், ஸ்கந்தா வீரர்களால் முதலாவது இன்னிங்ஸ் போன்று அச்சுறுத்தலான பந்துகளை வீச முடியாது போக மகாஜன 2 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கையில் 78 ஓவர்கள் நிலைத்திருந்து துடுப்பெடுத்தாடி 134 ஓட்டங்களை பெற போட்டி நிறைவுக்கு வந்திருந்தது. பலம் வாய்ந்த ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிக்கு எதிராக நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய மகாஜனவின் இளம் வீரர்கள் போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கிண்ணத்தினை தக்கவைத்துக் கொண்டனர். மேலுமொரு மாபெரும் கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவிற்கு வர, மகாஜனா 5 வெற்றிகளையும், ஸ்கந்தவரோதயா 4 வெற்றிகளையும் பதிவு செய்திருக்க, எஞ்சிய 10 போட்டிகளும் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளன.
Post a Comment