ஜெனோசன் பொறுப்பான ஆட்டம் - சென்றலைட்ஸ் அணி வெற்றி
கொக்குவில் வளர்மதி விளையாட்டுக்கழகம், யாழ்;.மாவட்டத்திலிருந்து அழைக்கப்பட்ட நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் அணிக்கு 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.
இந்தச் சுற்றுப்போட்டியின் ஆட்டமொன்று கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் 19 ஆம் திகதி நடைபெற்றது. இதில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. 29.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் நிதர்சன் 41, துவாரகசீலன் 20, பண்டார 19, கல்கோவன், செந்தூரன் தலா 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக, நிரோசன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ஜெரிக்துசாந்த் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சென்றலைட்ஸ் அணிக்கு ஜெனோசன் தனியாளாக நின்று அதிரடி காட்டி அரைச்சதம் பெற்று, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சென்றலைட்ஸ் அணி, 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் நாகராசா ஜெனோசன் 71 ஓட்டங்களையும், பிரியலக்சன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பாக பண்டார 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
Post a Comment